Thursday, November 17, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 2

30-வது வாரத்தில் பிரசவ வலி அதிகமாக இரத்தம் நிறைய வந்து விட்டது. குழந்தை குறுக்கே (“Breach position”) இருந்ததால் “C-Section” செய்து எடுத்தார்கள், ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 6:21 க்கு எங்கள் கண்ணன் பிறந்தான். குழந்தையின் எடை 1055 கிராம்கள் இருந்தது. குழந்தையை ஒரு நிமிடம் என்னிடம் காட்டிவிட்டு அவனுக்குச் செய்ய வேண்டிய இதர பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு போனார்கள். பிறகு என்னை பிரசவம் ஆன பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளும் அறைக்கு எடுத்துச் சென்றார்கள். என் கணவர் குழந்தையைப் பார்த்து விட்டு வந்து கர்பகாலத்துக்கு முன்னால் பிறந்த குழந்தை (“Premature baby”) எப்படி இருக்குமோ அவன் அப்படி இருப்பதாகவும், எல்லா பரிசோதனையும் நல்ல முடிவைத் தருவதாக மருத்துவர் சொன்னார் என்று கூறினார். அவனுடைய ஆப்கார் (“APGAR”) மதிப்பெண் ஒரு நிமிடத்திற்கு 7-ம், ஐந்து நிமிடங்களில் 9-ம் இருந்தது. ஆப்கார் என்பது ஒரு குழந்தையின் நிலைமை எப்படி இருக்கிறது என்று ஐந்து அடையாளங்களை வைத்து கண்டுபிடிப்பது. இது 7க்கு மேல் இருந்தால் நன்றாக இருக்கிறது என்று பொருள். குழந்தையை “Neo natal intensive care unit (NICU)”ல் வைத்து இருந்தார்கள். எனக்கு ஜுரம் இருந்ததால், ஜூரம் இறங்கியதும் குழந்தையைப் பார்க்க அனுமதிப்பதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் மாலை NICU-ன் தலைமை மருத்துவர் என்னை வந்து பார்த்தார். நான் கர்பமாக இருக்கும்போது ஏதாவது பிரச்சினை இருந்ததா என்று கேட்டார். நான் என்னுடைய 20-வது வாரத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினேன். உடனே, அவர் குழந்தையின் இருதயத்தில் முணுமுணுப்பு (“Murmur”) இருக்கிறது என்றும் குழந்தைக்கு “Echo cardiogram” எடுக்கவேண்டும் என்று கூறினார்.

குழந்தைக்கு “Echo cardiogram” செய்த இருதய மருத்துவர் (“Cardiologist”) குழந்தைக்கு “Double Outlet Right Ventricle (DORV) ”, “Severe Valvular Pulmanory Stenosis (PS) ”, “Large Ventricular Septal Defect (VSD)”, “Small Atrial Septal Defect (ASD)”, “Patent Ductus Arteriosus (PDA) ” என்ற ஐந்து குறைகள் இருப்பதாகச் சொன்னார். இவை ஒன்றுக்கு ஒன்று துணையாக இருந்ததால் குழந்தை நீலமாக மாறவில்லை என்றும் கூறினார். இதற்கு பெயர் “Pink Tetralogy of Fallot” என்று சொன்னார். குழந்தையின் இருதயம் தொடர்ந்து வளர்வதால், இன்னும் நான்கு வாரங்கள் கழித்து பார்த்துதான் எத்தனை குறைகள் இருக்கின்றன என்று நிச்சயமாகக் கூறமுடியும், என்றார். குழந்தை வளர்ந்த பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

இருதயத்தின் கீழ் பாகத்தில் வலது அறையிலிருந்து “Pulmonary artery” என்ற குழாயும், இடது அறையிலிருந்து “Aorta” என்ற குழாயும் கிளம்புகின்றன. DORV என்ற குறைபாட்டில் இரண்டும் வலது அறையிலிருந்து கிளம்புகின்றன. Valvular PS என்பது “Pulmonary valve”-ன் அடைப்பு. “VSD” என்பது இருதயத்தின் கீழ் பாகத்தில் உள்ள அறைகளைப் பிரிக்கும் சுவரில் உள்ள ஓட்டை. இது எங்கள் குழந்தைக்கு கீழ் பாகத்தின் மேலே பெரிய அளவில் இருந்தது. “ASD” என்பது இருதயத்தின் மேல் பாகத்தைப் பிரிக்கும் சுவரில் உள்ள ஓட்டை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது நுரையீரலை உபயோகிக்காது. அம்மாவிடமிருந்து குழந்தைக்கு பிராணவாயு கலந்த இரத்தம் செல்லும். அதற்காக “Pulmonary artery” மற்றும் “Aorta” - க்கு நடுவே ஒரு வழி “Ductus arteriosus” திறந்து இருக்கும். குழந்தை பிறந்து சுவாசிக்க ஆரம்பித்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்குள் அந்த வழி மூடிவிடும். இருதய மருத்துவர் சொன்னவை குழந்தை வயிற்றில் இருக்கும்போது சொன்ன “Tetralogy of Fallot” குறைகள் போலவே இருந்தன.

மறுநாள் ஜூரம் குறைந்ததும் குழந்தையைப் பார்க்கப் போனேன். குழந்தையை ஒரு திறந்த சின்ன கட்டிலில் வைத்து இருந்தார்கள். அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பில் நிறைய குழாய்கள் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை சிறிய உருவத்தில் இத்தனை குழாய்களா என்று மனதில் கலக்கம் மற்றும் அவனை முதன்முறையாகப் பார்க்கும் மகிழ்ச்சி, என்று மாறி மாறி வந்தது. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் சுற்றி இருந்த இயந்திரங்களைப் பற்றி சொன்னார். அவன் மிகவும் சீரான நிலைமையில் இருப்பதாகத் தெரிவித்தார். என்னுடைய பாலை சாப்பிடாததனால் அதைப் குளிர் சாதனத்தில் பதனப் படுத்தி அவன் சாப்பிட ஆரம்பித்ததும் குடுப்போம் என்றார். இரத்த பரிசோதனைக்காகவும் மற்றும் ஒருவித மஞ்சள் நிறமான உணவு (“Hyperalimentation”) ஏற்ற IV-யும், பிராணவாயு சுவாசிக்க மூக்கில் குழாயும், மஞ்சள் காமாலை இறங்க “Photo therapy” க்காக அவன் தலைக்கு மேல் விளக்கு வைத்து இருந்தார்கள். அவனுடைய இருதயத் துடிப்பு, சுவாசிக்கும் முறை, மற்றும் இரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவைக் கண்காணிக்க “Pulse oximeter”, “Apnea monitor” போன்ற கருவிகள் வைத்து இருந்தார்கள். அவனைப் போலவே பத்து குழந்தைகள் அந்த அறையில் இருந்தார்கள். குழந்தை பிறந்த நான்காவது நாள், என்னுடைய உடல்நிலை சரியாக இருந்ததால் என்னை மருத்துவமனையிலிருந்து விடுவித்து விட்டார்கள். வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் குழந்தையைப் பார்க்கச் சென்றேன் அவனை விட்டு விட்டு போகிறோமே என்று அழுகை வந்தது. அவனைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ், எந்த நேரத்திலும் குழந்தையைப் பார்க்கலாம், மற்றும் எந்த நேரத்திலும் தொலைபேசியின் மூலமாக குழந்தையின் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்.

தினமும் என் கணவருடன் குழந்தையைப் பார்க்கச் செல்வேன். அவனுக்கு அருகில் அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்வோம். ஒவ்வொரு நாளும் குழந்தை முன்னேற்றம் காண்பித்தான். அவன் உடம்பில் சொறுகியிருக்கும் குழாய்களைப் பிடித்து இழுப்பான். அதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும், ஆனால் அதே சமயத்தில் அவன் வலுவடைந்து வருகிறான் என்று மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தையின் இரண்டாவது வாரத்திலிருந்து அவனுக்கு துடைத்து விடவும், மற்றும் மடியில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன். பிறந்து இரண்டாவது வாரத்தில், வாயில் குழாய் வழியாக அம்மா பாலைச் செலுத்தினார்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லிலிட்டர் என்று செலுத்தினார்கள், மேலும் தொடர்ந்து சுவாசிப்பதற்காக வைத்திருந்த CPAP (Continuous Positive Airway Pressure) குழாயை சிறிய குழாயாக ("Nasal canula") மாற்றினார்கள். தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லிலிட்டர் பாலைக் கூட்டினார்கள். குழந்தைக்கு "Apnea of Prematurity" இருந்ததால் அவனுக்கு "Caffeine” கொடுத்தார்கள். குழந்தைக்கு சிவப்பு இரத்த அணுக்கள் அதிகம் சுரக்கவில்லையென்றால் இரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும் என்றும், அப்பாவிடமிருந்து இரத்தம் எடுத்து பரிசோதனை செய்து எல்லாம் சரியாக இருந்தால், அதே இரத்தத்தைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் என் கணவர் இந்தியா போய்விட்டு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகாததால், அவருடைய இரத்தத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குச் சில "Viral infection" இருப்பதால் இந்த முடிவுக்குக் காரணம்.

பிறந்து 3-வது வாரத்தில் குழந்தையுடைய நிறம் கொஞ்சம் வெளிர் நிறமாக மாறியது, இரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைந்து, அவனுடைய மூச்சு மற்றும் இருதயத்துடிப்பு சீராக இல்லாததால் அவனுக்கு இரத்த வங்கியிலிருந்து (“Blood bank”) கொண்டு வந்த இரத்தம் ஏற்றினார்கள். பிறகு குழந்தைக்கு ஒரு மாதம் இருக்கும்போது அவனுக்குச் ஜூரம் வந்ததால் "Lumbar test" செய்தார்கள். முதுகுத் தண்டுவடத்தின் அடியில் ஒரு ஊசியைக் குத்தி அதிலிருந்து எடுக்கும் திரவியத்தைப் பரிசோதித்து பார்த்தார்கள். எந்த ஒரு “Bacterial infection”-ம் இல்லை என்று வந்தது. "Antibiotics" கொடுத்தார்கள், மேலும் இரத்தம் ஏற்றினார்கள். இந்த ஜூரத்தால் குழந்தையின் எடை கொஞ்சம் இறங்கியது. அவனுடைய உணவை, அவனது எடையை கொண்டு கணக்கிடுவார்கள் (1000 கிராம்கள் எடைக்கு, 20 மில்லிலிட்டர்/நாள்). ஜூரம் இறங்கியதும் மறுபடியும் உணவை ஏற்றினார்கள். பிறகு புட்டியில் பாலைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். குழந்தைக்கு "உறிந்து, பாலை விழுங்கி, மூச்சு விடுவதற்குத் (Suck, Swallow, Breathe)" தெரியாததால் அவனுடைய பிராணவாயு அளவு (O2 Saturation) இரத்தத்தில் குறைந்து விடும், சில சமயம் 40-50% மட்டுமே இருக்கும். அதனால் அவனுக்கு பிராணவாயுவை பால் குடிக்கும் போது மட்டும் கொடுத்தார்கள். நானும் சிறிது நாட்களில் பால் கொடுக்க ஆரம்பிதேன். அவனுக்கு இருதய கோளாறும் இருந்ததால் குழந்தைக்கு பால் குடுக்கும்போது நிறம் மாறினால் புட்டியை வெளியில் எடுக்க சொல்லிக் கொடுத்தார்கள்.

பிறந்த 5-வது வாரத்தில் NICU-விலிருந்து, Special care unit-க்கு மாற்றினார்கள். பிறந்து 6-வது வாரத்தில் அவனுக்கு ஆசனவாயில் இருந்த ஒரு பெரிய வெடிப்பில் இருந்து இரத்தம் வந்தது. அது பால் ஒத்துக் கொள்ளாததனால் (“Milk protein allergy”) என்று ஒரு மருத்துவர் எண்ணினார், ஆனால் அது தானாகச் சரியாகியது. அவனை வீட்டிற்கு அழைத்து போவதற்கு முன்னால் "கார் சீட் பரிசோதனை" (குழந்தையை கார் சீட்டில் வைத்து, கார் ஒடும் சூழ்நிலையை ஒரு கருவி உருவாக்க, குழந்தையின் சுவாசத்தையும், இருதயத் துடிப்பையும் கண்காணிப்பது), "4 channel PCG" பரிசோதனை செய்தார்கள். இதில் 24-மணி நேரம் குழந்தையைக் கண்காணிப்பார்கள். இதில் குழந்தையின் சுவாசம், மற்றும் இருதயத் துடிப்பைக் கணிப்பொறியில் பதிவு செய்வார்கள். முதல் பரிசோதனையில் குழந்தைக்கு “Apnea” இன்னும் இருப்பது தெரிய வந்தது, அதனால் நடுவில் நிறுத்தியிருந்த "Caffeine"-ஐ மறுபடியும் கொடுக்கச் சொன்னார்கள் இரண்டாவது முறை பரிசோதனை செய்து பார்த்த பிறகு, குழந்தையை வீட்டிற்கு "Apnea monitor", "Pulse oximeter" மற்றும் "Oxygen cylinder" இதனுடன் அனுப்பினார்கள்.

இத்தனைக் கருவிகளுடன் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்வது பயமாக இருந்தாலும், அவன் வீட்டிற்கு வந்ததும் எங்களுக்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. "Apnea monitor" 24 மணி நேரம் அவனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவனது மார்பில் ஒரு பட்டையைக் கட்டி அந்த கருவியுடன் இணைத்தே வைத்திருப்போம். அந்தக் கருவி, நாம் தோளில் மாட்டிக் கொள்ளும்படி இருந்தது. "Pulse oximeter" மற்றும் "Oxygen cylinder" அவனுக்கு பால் கொடுக்கும்போது மட்டும் உபயோகப் படுத்தினோம். அத்தனை கருவிகளும் ஏற்படுத்தும் ஓசை முதலில் கலக்கத்தை உண்டு செய்தாலும், சிறிது நாட்களில் அந்த கலக்கம் குறைந்து. நம்மைத் தவிர குழந்தையைக் கண்காணிக்கத் துணையாக கருவிகள் இருப்பது பயத்தைத் தெளிய வைத்தது. குழந்தை முகம் பார்த்து சிரிக்கும்போது எல்லா கவலையும் பறந்து போனது. அவனுடைய அன்றாட விளையாட்டில் மனதைச் செலுத்தினோம். வாரம் ஒரு முறை குழந்தை மருத்துவரிடமும், மாதம் ஒரு முறை இருதய மருத்துவரிடமும்,
மாதம் ஒரு முறை அவனுடைய சுவாசிக்கும் முறையைக் கண்காணிக்க "Apnea" பரிசோதனை நிலையத்திற்கும் சென்றோம்.

அவன் வீட்டிற்கு வந்த ஒரு மாதத்தில் அவனுக்குத் திடீர் என்று ஒரு நாள் 102º F (38.89º C) காய்ச்சல் வந்தது. அவனுடைய மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். காய்ச்சலோடு சேர்ந்து சளியோ, இருமலோ இல்லாததால் அவர் அவனை மருத்துவமனையில் சேர்க்கும்படி சொன்னார். மருத்துவமனையில் அவனுக்கு “Lumbar test”, “Echo cardiogram”, சிறுநீர் பரிசோதனை எல்லாம் செய்து பார்த்தார்கள். பிறகு அவனுக்கு “Urinary tract infection” இருப்பது தெரிய வந்தது. அவனுடைய சிறுநீரகத்தை “Ultrasound” மூலம் பார்த்தார்கள், அப்பொழுது வலது பக்க சிறுநீரகத்தில் வீக்கம் இருப்பது தெரிய வந்தது, இதை "Hydronephrosis" என்றார்கள். ஐந்து நாட்களில் அவனுக்கு காய்ச்சல் குறைந்த பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம். மூன்று வாரத்திற்கு பிறகு அவனுக்கு “Voiding cystourethrogram-VCUG test” செய்தார்கள். “VCUG” பரிசோதனையில் ஒரு சிறிய குழாயைச் ("Catheter") சிறுநீர் கழிக்கும் இடம் ("Urethra") வழியாகச் சொறுகி, அதன் வழியாக “Iodine solution”-ஐ, சிறுநீரகப் பைக்கு ("Urinary bladder") செலுத்தினார்கள். பிறகு குழந்தை சிறுநீர் கழிக்கும் போது X-Ray எடுத்தார்கள். அவனுடைய "Urologist" (இவர் சிறுநீரக சம்பந்தமான பிரிவில் தேர்ச்சி பெற்றவர்)அவனுக்கு வலது பக்க சிறுநீரகத்தில் “Reflux 3” இருப்பதகவும், இடது பக்க சிறுநீரகத்தில் “Reflux 1” இருப்பதாகவும் கூறினார். "Urinary bladder"-லிருந்து வெளியேறும் சிறுநீர், மறுபடியும் சிறுநீரகத்துக்கு வருவது "reflux" . எனப்படும். திரும்பிச் செல்லும் சிறுநீர், சிறுநீரகத்துக்குச் சென்றால் ஐந்து என்றும் (இது மிகவும் அதிகம்), சிறிது தூரம் மட்டுமே சென்றால் ஒன்று என்றும் "reflux" வரிசைப்படுத்தப் படுகிறது. இதன் தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறு படுகிறது. என்னுடைய குழந்தைக்கு ஒரு வருடம் "Bactrim" என்ற “Antibiotics” கொடுத்துவிட்டு, மறுபடியும், “Ultrasound” மற்றும் "Nuclear Cystogram" செய்வார்கள். " Nuclear Cystogram "-ம் VCUG-யைப் போன்றதே. இதில் குழந்தைக்கு "Iodine Solution" க்கு பதிலாக உப்பு நீரை "Saline Solution" , “Technetium” என்ற பொருளோடு செலுத்துவார்கள். இந்த குறை 70 சதவிகிதம் குழந்தைகளுக்குத் தானே சரியாகிவிடும். இல்லை என்றால் “Deflux” ஊசி போடுவார்கள். இதை ஒரு தடவை போடுவார்கள் என்று நினைக்கிறேன். இருதய குறைபாடுகளுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு சிறுநீரகம் சம்பந்தமான கோளாறுகளும் வருகின்றன. இரண்டு உறுப்புகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவாவவதால் இது போல இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

Blogger பத்மா அர்விந்த் said...

ஜெயஸ்ரீ
கலங்க வைத்த எழுத்து. நீங்கள் கரூற்றிருக்கும் போது ஏதேனும் மருந்துகள் (இரத்த அழுத்தம், டையுரெட்டிக்)மருந்து எடுத்து கொண்டீர்களா?
என் மகனும் வளர்ச்சி குறைவாகவே இருந்தான், மற்றும் சில பிரச்சினைகளுடன். இதற்கே நான் ஆய்வகத்தில் வேலை செய்ததால் ரேடிய கதிர்வீச்சின் காரணம் என்று நானே ஜீன் சீக்வென்சிங் செய்து அறிந்தேன்.உங்கள் இந்த பதிவு பலருக்கு பயன் படும், மேலும் நம்பிக்கையை தரவும் பயன்படும்.

2:54 PM  
Blogger அன்பு said...

ஜெயஸ்ரீ,
மிகப்பொறுமையாக, விரிவாக, அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லியிருக்கின்றீர்கள். நாங்களும் இதுபோன்ற நிலையை எதிர்கொண்டதால்(?) உங்கள் ஒவ்வொரு சொல்லையும் மனத்துள் உள்வாங்க இயலுகிறது...

தூரதேசத்தில் இருந்துகொண்டு இவ்வளவு சிரமப்படுவது கொடுமை - ஆனால் அதனிலும் ஒரு ஆறுதல் இங்கு இருப்பதால்தான் இதைத்தாண்டி வர இயலுகிறது என்பதும் உண்மை. கண்ணன் நலமா... நன்றி.

6:23 PM  
Blogger அன்பு said...

நிறைய சிரமங்களை அனுபவித்திருக்கிறீர்கள். கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தால்
வைத்த கண் வாங்கமுடியவில்லை. மிகவும் தெளிவாக, இயன்றவரையில் அனைவருக்கும்
புரியும்படி எழுதியதற்கு வாழ்த்துக்கள். "பேஷண்டுகளுக்கு என்ன தெரியும்?!"
என்று ஆணவம் கொள்ளும் மருத்துவர்கள் இதுபோன்ற கட்டுரைகளை வாசிக்கவேண்டும் என்று
சொல்லத் தோன்றுகிறது.

- சேதுக்கரசி

6:54 PM  
Blogger ஜெ. ராம்கி said...

ஜெயஸ்ரீ, ரொம்ப நல்ல பதிவு மட்டுமல்ல, உருப்படியான பதிவு. தோழியரில் நீங்களும் இருக்கீங்களா?

8:13 PM  
Blogger Aruna Srinivasan said...

பாதுகாக்க வேண்டியச் சுட்டிகள் வரிசையில் உங்களுடைய இந்தப் பதிவைச் சேர்த்துள்ளேன். உச்சரிக்கக் கடினமான மருத்துவப் பெயர்களையெல்லாம் சிரமம் எடுத்துக்கொண்டு முடிந்த வரைத் தமிழிலும் விளக்கியுள்ளது படிக்க எளிதாக இருக்கிறது. தமிழ் வலைபதிவுகளின் தனித்தன்மையை இது போன்ற அனுபவங்கள் பிரதிபலிக்கின்றன என்பது என் எண்ணம். உங்கள் குழந்தைகளுக்கு என் அன்பும் ஆசிகளும் ஜெயஸ்ரீ.

10:52 PM  
Blogger Thangamani said...

மிகவும் துன்பம் தந்த அனுபவத்தை பலருக்கும் பயன்படும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி!

3:49 AM  
Blogger Jay said...

பத்மா,
கருவுற்றிருந்த முதல் சில வாரங்களில் நான் இந்தியாவில் இருந்தேன். அப்பொழுது காய்ச்சல் வந்தது. அதற்காக "paracetamol" சாப்பிட்டேன். பிறகு எனக்கு மூன்று மாதங்களில் "Sciatica" போன்ற வலி இருந்தது. இது குழந்தை பிறந்து 8 மாதங்கள் வரை இருந்தது. இதற்கென்று நான் மருந்து எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. 18-வது வாரத்தில் சிறுநீர் பரிசோதனையில் அதிகமாக சக்கரை அளவு இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இரத்த பரிசோதமனையில் சரியான அளவே இருந்தது.

என் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில், இன்னொரு தாயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தக் குழந்தைக்கும் இது போன்ற குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தது. என் குழந்தை முழு கர்பகாலத்திற்கு 2 1/2 மாதங்கள் முன்பே பிறந்து விட்டான். இல்லையென்றால் இரண்டு குழந்தைகளும் ஒரே மாதத்தில் பிறந்து இருப்பார்கள். அந்த குழந்தையின் தாய் வசித்தது "Woodbridge, NJ", வேலை செய்தது "Edison, NJ". இது தற்செயலாக நடைபெற்ற சம்பவமா அல்லது சுற்றுப்புற சூழல் சிலருக்கு ஒத்துக் கொள்ளாததனாலா என்று நான் யோசித்ததுண்டு.

உங்கள் மகன் இப்பொழுது எப்படியிருக்கிறான்? அவன் நலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

ஜெயஸ்ரீ

10:18 AM  
Blogger Jay said...

அன்பு-சேதுக்கரசி,
உங்களுக்கும் இது போன்ற அனுபவம் என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?

ரஜினி ராம்கி,
வீட்டில் இரண்டு குழந்தைகளின் அன்புத் தொல்லையால், தோழியரில் அதிகமாக இதுவரை பங்கு கொள்ளவில்லை.

Selvanayaki, Aruna, Thangamani

நீங்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி.

ஜெயஸ்ரீ

10:36 AM  
Blogger குமரன் (Kumaran) said...

Jeyasri,

Your blogspot has been mentioned in the 'Ariviyal Aayiram' part of today's Dinamalar. Congratulations.

12:28 PM  
Blogger Jay said...

Thanks Kumaran for letting me know.

3:24 PM  
Blogger அன்பு said...

அன்பு-சேதுக்கரசி,
அன்பு, சேதுக்கரசி என்பதுதான் சரி. சேது உங்களுடைய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டமிட ப்ளாக்கர் கணக்கு இல்லாததால் உதவி செய்தேன்.

உங்களுக்கும் இது போன்ற அனுபவம் என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
நலம். மகளுக்கு மருத்துவத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நன்றி.

10:33 PM  

Post a Comment

<< Home