Friday, November 18, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 3

இப்படியாக குழந்தைப் பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டது. என் அப்பா எங்களுக்கு உதவிக்காக வந்தார். குழந்தையின் சுவாசிக்கும் முறை அவன் பிறந்து 9-வது வாரத்தில் சரியாகியது. பிறந்து 14-வது வாரத்தில் பால் குடிப்பதற்கும் கற்றுக் கொண்டான். என் மாமனார், மாமியார் விசா முடிவடைந்ததால் ஜனவரி 1-ம் தேதி இந்தியா திரும்பிச் சென்றார்கள். குழந்தைக்காகவும், என்னுடைய முதுகு மற்றும் இடுப்பு வலி குறையாததால், என் காரணமாகவும், அடிக்கடி மருத்துவரிடமும், மருத்துவமனைக்கும் சென்றதால், இவர்கள் எங்களுடன் இருந்தது, மனதிற்கு மிகவும் தெம்பை அளித்தது. அவனுக்கு 4 வது மாதம் முடிந்த பிறகு வழக்கமாகச் செய்யும் இருதய பரிசோதனைக்காக ஜனவரி 7-ம் தேதி மருத்துவரிடம் சென்றோம். அவனுடைய “Valve”-ன் அடைப்பு அதிகரிப்பதால், அடுத்த ஒரு மாதத்திற்குள் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அப்போது அவனுடைய எடை “10 pound” (4.53 கிலோ) இருந்தது. "Children’s hospital, Philadelphia -வின்", இருதய அறுவை சிகிச்சை செய்யும் நிலையத்தின் தலைமை மருத்துவர், Dr. Spray – உடன், அறுவை சிகிச்சைக்கான நேரம், ஜனவரி 13-ம் கிடைத்தது. இதை ஏற்பாடு செய்த நர்ஸ், எங்களிடம் அங்கே தங்குவதற்கான மற்ற விபரங்களையும் சொன்னார். "Ronald McDonald house" என்ற விடுதி, இது போன்ற குழந்தைகளின் குடும்பங்கள் வந்து தங்குவதற்கான வசதிகளுடன் இருக்கும் என்று சொன்னார். இதை பற்றிய விவரம் அறிய இந்த வலைதளத்திற்கு “http://www.philarmh.org/be_our_guest.php” செல்லவும் .

வீட்டிற்கு வரும்போது மனதில் கலக்கம், இருந்தாலும் இதுவரை வழிகாட்டிய கடவுள் கண்டிப்பாக கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையும் இருந்தது. கர்ப காலத்தில் 20-வது வாரத்தில் “Amniocentesis”-ல் இருந்த கண்டத்தைத் தாண்டியது, 30-வது வாரத்திலே பிறந்து பல இன்னல்களைத் தாண்டவைத்தது, பிறந்து நான்காம் மாதம் வரை அறுவை சிகிச்சைக்கு தேவையான எடை ஏறியது, மற்றும் எந்த ஒரு சிக்கலும் வராமல் இருந்தது எல்லாமே கடவுள் அருள்தான். அதுவும் நாங்கள் அறுவை சிகிச்சை செய்வதற்காக போகும் மருத்துவமனை உலகப் பிரசித்தி பெற்றது.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் குழந்தைக்கு எந்த ஒரு “Infection”-ம் இல்லாமல் இருக்கவேண்டும், மேலும் நுரையீரலில் சளி சேராமல் இருக்கவேண்டும் (“Chest Congestion”). குழந்தை பிறந்தததிலிருந்து, குழந்தைக்கு சளியோ, ஜூரமோ வரக்கூடாது என்பதற்காக நாங்கள் நண்பர்களையோ, விருந்தினர்களையோ வீட்டிற்கு அழைத்ததில்லை, நாங்களும் யார் வீட்டிற்கும் சென்றதில்லை. குளிர்காலத்திற்கு முன்னால் வீட்டில் அனைவரும் "flu" ஜூரம் வராமல் இருப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டோம். என் கணவர் வேலை நிமித்தமாக வெளியே செல்வது தவிர்க்கமுடியாதது. அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரம் முன்னால் என் கணவருக்கு ஜூரம் வந்தது, பிறகு என் மகளுக்கு காதில் “Infection” வந்தது. நல்ல வேளையாக என் மகனுக்கு ஒன்றும் இல்லை.

என் அப்பாவின் நண்பர் "Children's hospital philadelphia" மருத்துவமனைக்கு சிறிது அருகில் இருந்தார். என் மகளையும், அப்பாவையும் நண்பர் வீட்டில் தங்கவைத்தால் நாங்கள் எங்கள் குழந்தையின் மேல் முழு கவனம் செலுத்தலாம் என்று அவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டோம். அது பொங்கல் தினம், பண்டிகை நாள், அவர் தாராளமாக வாருங்கள் என்று சொன்னார். நாங்கள் எங்களுக்குத் தேவையான துணி, குழந்தைகளுக்கான துணி, விளையாட்டு சாமான்கள், எங்களுக்குத் தேவையான மருந்து, மற்றும் என் மகனுக்காக “Apnea monitor”, “Pulse Oximeter” எடுத்துக் கொண்டு ஜனவரி 12-ம் தேதி அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் செய்ய வேண்டிய பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்கு குழந்தைக்கு மார்புக்கான எக்ஸ்-ரே (Chest X-Ray), மற்றும் இரத்தப் பரிசோதனை செய்தார்கள். பிறகு எங்களுக்கு மறுநாள் நடக்க இருக்கும் அறுவை சிகிச்சை பற்றி, அங்கே பயிற்சிக்காக இருக்கும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ("Resident") விரிவாகச் சொன்னார். முதலில் குழந்தையை மயக்க நிலையில் ஆழ்த்துவார்கள், பிறகு குழந்தையின் இருதயத்தின் வேலையை இருதய-நுரையீரல் இயந்திரம் (“Heart-Lung machine/Cardiopulmanory bypass machine”) செய்யும். அவனுடைய இருதயத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வார்கள், இருதயத்துடிப்பு சரியாக வந்துவிட்டவுடன், சிறிது நேரம் கழித்து “Bypass” இயந்திரத்தை நிறுத்தி விடுவார்கள். மயக்கத்தில் ஆழ்த்துவதிலிருந்து, ஒரு இடர்பாடும் இல்லாமல் அறுவை சிகிச்சை நிகழ்ந்தால் குழந்தையை நான்கு மணி நேரம் கழித்து பார்க்கலாம் என்றார். குழந்தைக்கு முதல் நாள் 2:00 மணிக்கு தண்ணீர் (“Pedialyte") கொடுக்கலாம் என்றும் அதற்குப் பிறகு எந்த ஒரு ஆகாரமும் கொடுக்கக் கூடாது சொல்லி மறுநாள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறினார். பிறகு குழந்தையை என் அப்பாவின் நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.

மறுநாள் காலை 7:30 மணிக்கு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். என் மகளும், அப்பாவும் நண்பர் வீட்டில் தங்கியிருந்தார்கள். முதலில் செய்ய வேண்டிய பரிசோதனைக்கு பிறகு, குழந்தையை அறுவை சிகிச்சை முழுவதும் மயக்க நிலையில் வைக்கும் மருத்துவர் (“Anesthesiologist”), குழந்தையை எங்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். அவரிடம் கொடுத்த போது என் கண்களில் நீர் வந்தது, அவர் குழந்தைக்கு ஒரு வலியும் தெரியாமல், ஒரு mask-ஐ மூக்கில் வைத்து மயக்கத்தில் ஆழ்த்துவோம். குழந்தை உங்களிடம் 4 மணி நேரம் கழித்து பத்திரமாக வருவான் என்றார். இதற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப் போகும் Dr. Thomas Spray-யை முதன் முறையாகப் பார்த்தோம். அவரைப் பார்த்தவுடன் மனதில் இருந்த நம்பிக்கை அதிகரித்தது. கடவுள் அவர் மூலமாக என் குழந்தையைக் காப்பாற்றுவார் என்று தோன்றியது. அவர் தினமும் ஒரு குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்கிறார். "குழந்தைக்கு 5 குறைபாடுகள் இருந்தாலும், முக்கியமானது இருதயத்தின் கீழ்பாகத்தில் உள்ள பெரிய ஓட்டையை (“VSD”) அடைப்பது, "Aorta"-வின் இடத்தை மாற்றுவது (அதற்கு ஒட்டையை அடைக்கும்போதே வழி செய்துவிடுவோம் என்றார்), மேலும் "Pulmonary Valve"-வில் அடைத்திருக்கும் சதையை எடுத்துவிடுவது" என்று கூறினார். ஒரே அறுவை சிகிச்சையில் அனைத்தையும் செய்ய முயற்சி செய்வோம். சில நேரம் Valve-ன் தன்மையைப் பொருத்து, வேறு ஒரு புதிய Valve-வை தைக்க நேரலாம். அப்படி இருந்தால் மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை குழந்தை பெரியவனானவுடன் செய்ய நேரலாம் என்று சொன்னார். எல்லா அறுவை சிகிச்சைக்கும் உரிய அபாயங்கள் இந்த சிகிச்சைக்கும் உள்ளது. அதை தவிர்த்து அறுவை சிகிச்சை செய்யும்போது எங்களுக்கு இருதயத்தின் துடிப்பை ("Rhythm of the Heart")கொடுக்கும் நரம்பு எது என்று சொல்ல முடியாது . அது சரியாக இருக்கிறதா என்று அறுவை சிகிச்சை முடிந்தவுடனேயே சொல்லிவிடமுடியும். அதில் ஏதாவது பிரச்சினை நேர்ந்தால், இருதயத் துடிப்பைத் தரும் கருவி ("Pace maker") வைக்க நேரலாம், இது ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு நிகழும் வாய்ப்பு இருக்கிறது. அந்த கருவியைப் பொருத்துவதற்காக ஒரு கம்பியை ("Pacing Wire") இருதயத்தில் வைதிருப்போம். குழந்தையின் நிலைமை சரியானவுடன் நீக்கி விடுவோம், என்று கூறினார். பிறகு அவர் குழந்தையின் அறுவை சிகிச்சை செய்வதற்காகச் சென்றார்.

என்னையும், என் கணவரையும் எங்கள் குழந்தைக்காக நியமிக்கப்பட்ட நர்ஸ், எல்லா பெற்றோர்களும் காத்துக் கொண்டிருக்கும் அறைக்கு ("Waiting room") அழைத்து சென்றார். அங்கே கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நர்ஸ் எங்கள் குழந்தையின் நிலைமையை எங்களுக்குத் தெரிவித்தார். சுமார் மூன்றரை நேரத்தில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. பிறகு Dr. Spray எங்களை வந்து பார்த்து, எல்லா குறைபாடுகளையும் சரி செய்ததாகவும், குழந்தைக்கு “Valve”-ன் அடைப்பை நீக்கிவிட்டதாகவும், புது “Valve” போடவில்லை என்றும், இருதய துடிப்பு சரியாக இருப்பதாகவும் தெரிவித்தார். எங்களின் மன நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தோம்.

பிறகு குழந்தையை பார்க்க அழைத்து சென்றார்கள். குழந்தையின் மார்பில் கட்டு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்த இடம் தெரிந்தது, மேலும் இரண்டு குழாய்கள் இருதயத்தின் மேல்பாகத்தில் வலப்பக்கம் இருக்கும் அறையிலிருந்து எடுக்கப்பட்டது. இது இருதயத்தின் அழுத்ததையும் (“Pressure”), மற்றும் இரத்ததின் கன அளவைக் (“Volume infusion”) கண்காணிக்க உதவியாக இருக்கும். ஒரு "Pacing wire" வெளியே தெரிந்தது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு வரும் திரவியத்தை வெளியேற்ற ஒரு குழாய் இருந்தது. அந்த கருவிகள் பற்றி நர்ஸ் எங்களுக்கு விவரித்தார். அவன் முன்னேற்றத்தைப் பார்த்து ஒவ்வொன்றாக எடுத்து விடுவார்கள், என்றார். குழந்தையின் நிலைமை சீராக இருந்தது. எங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தோம். என் முதுகு மற்றும், இடுப்பு வலி காரணமாக கம்பு வைத்துக் கொண்டிருந்தேன், இதைப் பார்த்த நர்ஸ், அருகிலேயே தங்கினால் வசதியாக இருக்கும் என்று கூறி, "Ronald McDonald House"-க்கு சென்று பதிவு செய்து கொள்ளச் சொன்னார். எங்களுக்கும் அது சரியாகப் படவே, எங்கள் நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு, என் மகளுடனும், என் அப்பாவுடனும் அங்கே தங்கினோம்.

இந்த விடுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, மற்றும் சமையல் அறையில் சமைப்பதற்காகப் பாத்திரங்கள் மேலும் பல வசதிகள் இருந்தன. மேலும் சில பொதுத்தொண்டு செய்பவர்கள் ("Volunteers") உணவு கொண்டு வந்து அனைவருக்கும் தருகிறார்கள். இங்கே இருக்கும் குடும்பங்கள் "Children’s hospital philadelphia"-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் உறவினர்கள். அதனால் நம் நிலையைப் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. அந்த குடும்பங்களைப் பார்த்து மேலும் நம்பிக்கை உண்டாகிறது. இங்கே என் இரண்டு வயது மகள் மிகவும் மகிழ்சியோடு இருந்தாள். காலையில் நானும் என் அப்பாவும் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்தோம். இரவு என் கணவர் குழந்தையோடு தங்கி இருந்தார். எங்களை அழைத்துப் போவதற்காக விடுதியின் வேன் குறிப்பிட்ட நேரங்களில் வந்தது. குழந்தையின் முன்னேற்றம் சீராக இருக்கவே மருத்துவமனையிலிருந்து 4-வது நாளில் விடுவித்தனர். அவனுக்கு மார்பில் உள்ள கீறல் ஆற 4 வாரங்களும், மார்பு எலும்பு சேர 8 வாரங்கள் ஆகும் என்பதால் அவனைப் பராமரிக்கும் முறைகளை மருத்துவமனையில் எங்களுக்கு கூறினர். அன்றே எங்கள் கண்ணனுடன் வீட்டிற்குத் திரும்பி வந்தோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger அன்பு said...

கண்ணாவுக்கு அனைத்து அறுவைச்சிகைச்சைகளும் நல்லமுறையில் முடிந்தது சற்றே ஆறுதல் தந்தது. பகிர்தலுக்கு நன்றி.

8:22 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

ஜெயஸ்ரீ
பகிர்தலுக்கு நன்றி.

9:29 AM  

Post a Comment

<< Home