Saturday, November 19, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 4

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிவடைந்தது ஒரு பெரும் பாரத்தை மனத்தில் இருந்து இறக்கியது. அறுவை சிகிச்சை முடிந்தபின் குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க "Acetaminophen" என்ற மருந்தும், அறுவை சிகிச்சைக்கு பின் உடலில் சேரும் கழிநீரை கழிக்க "Diuretic" என்ற மருந்தும் கொடுத்தோம். அறுவை சிகிச்சை முடிந்த முதல் வாரத்தில் அவனை குழந்தைகள் மருத்துவரிடமும் (“Pediatrician”) மற்றும் இருதய மருத்துவரிடம் (“Cardiologist”) அழைத்துச் சென்றோம். இருதய மருத்துவர் அவனுடைய "Platelletes" எண்ணிக்கையைப் பார்க்க இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். மருத்துவமனையில் இந்த எண்ணிக்கை கம்மியாக இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும்போது இரத்தம் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு மருந்து செலுத்துகிறார்கள். சில பேருக்கு ஒரு வாரத்தில் "Platelletes" எண்ணிக்கை பழைய நிலைக்கு வந்துவிடும். இவனுக்கு மூன்று வாரத்தில் அந்த எண்ணிக்கை சரியானது. இருதய மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு காயம் ஆறிய இடத்தில் ஏதேனும் சதையோ ("Scar tissue") அல்லது நீர் சேர்ந்து இருக்கிறதா என்று "Echo cardiogram" செய்து பார்த்தார். பிறகு அவன் நன்கு முன்னேறி வருவதாகச் சொன்னார். காயம் ஆறிய பிறகு 8-வது வாரத்தில் அவனுடைய தையல்களை இருதய மருத்துவர் பிரித்தார். பிறந்ததிலிருந்து குழந்தையை வயிற்றில் படுக்க விடாததால் தலை நிற்கவில்லை. மேலும் அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக அவன் குப்புற கவிழாமல் இருக்க கவனமாக இருந்தோம். இனிமேல் அவன் குப்புற கவிழ்ந்தால் பரவாயில்லை என்று மருத்துவர் சொன்னார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதம் கழித்து "Apnea Clinic" சென்றோம். அவனுடைய சுவாசிக்கும் முறை சரியாக இருப்பதால் இனிமேல் "Apnea monitor" தேவையில்லை என்று சொன்னார்கள். பிறப்பில் இருந்த குறைபாடுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிட்டது. அவனுக்கு சிறுநீரகத்தில் உள்ள "Reflux"-ம் இதே போல நீங்கிவிடும் என்று நம்புகிறோம்.

குழந்தை பிறந்ததிலிருந்து அவனுடைய உடல்நிலை காரணமாக அவன் வயதுக்கேற்றபடி தசை வலுவடையவில்லை ("Lack of Muscle tone"). அவனுக்கு இடது பக்கம் சிறிது வலு கம்மியாக இருந்தது. இதற்காக நரம்பியல் மருத்துவரைப் ("Neurologist") பார்த்தோம். அவர் சொன்னபடி அறுவை சிகிச்சை முடிந்து எட்டு வாரத்திற்கு பிறகு அவனுக்கு உடற்பயிற்சி ("Physical therapy") செய்ய ஆரம்பித்தோம். அவன் அப்போது உடல் அளவில் பிறந்த குழந்தை போலிருந்தான், ஆனால் மனத்தளவில் ஏழாம் மாத குழந்தை போல் செய்ய நினைத்தான். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த இரண்டு மாதத்தில் குப்புற கவிழ்ந்தான். மூன்று மாதத்தில் நீந்த ஆரம்பித்தான். ஆறு மாதத்தில் உட்கார ஆரம்பித்தான். ஏழாவது மாதத்தில் தவழ ஆரம்பித்தான். அவனுடைய தசையின் வலு அதிகரிக்க உட்கார்ந்து விளையாடுவதும், சில ஒலிகளை உச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறான். உடலில் மார்பு, மற்றும் கழுத்து வலுவடைந்தால்தான் வார்த்தைகளும் வருமாம். இவன் தன்னுடைய வயது குழந்தைகள் போல வலுவடையவும், பேசவும் இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம். மூன்று வயதாகும்போது மற்ற குழந்தைகள் போலவே எல்லாம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கால்பந்தாட்டம் போன்ற "Contact Sports"-ஐ தவிர மற்ற துறைகளில் அவன் உடலும், மனமும் இடம் கொடுக்கும் வரையில் என்ன வேண்டுமானாலும் அவன் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிரசவ காலத்தில் "Sciatica" வலியினால் அவதிப்பட்டேன். மேலும் குழந்தையிடம் கோளாறு இருப்பதாக எண்ணி வருந்தினேன். பிறகு குழந்தையிடம் குறை ஒன்றும் இல்லை என்று மகிழ்ந்தேன். குழந்தை பிறந்ததும் குறைகள் கேட்டு அதிர்ந்தேன். என்னுடைய வலிகளும் குறையாததை நினைத்து கவலை கொண்டேன். சில நேரம் கடவுளிடம் சொல்லி அழுதேன். குழந்தையின் போராட்டத்தில் என்ன ஆனாலும் மனம் தளராமல் ஒத்துழைக்க உறுதி கொண்டேன். எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எங்களுடைய மகள், நாங்கள் மனம் தளராமல் இருக்க வடிகாலாக இருந்தாள். எங்களுக்காக உறவினர்களும், நண்பர்களும் கடவுளை வேண்டிக்கொண்டார்கள். இவர்களின் பிரார்த்தனையின் வலிமை, மருத்துவக் குழுவின் திறமை, என் குழந்தையின் விடாமுயற்சி மற்றும் எங்கள் எல்லோரின் நம்பிக்கை இந்த சோதனை கட்டத்தை தாண்டவைத்தது. எங்களுடைய அனுபவம் எங்களை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. எங்கள் குழந்தைச் செல்வங்களை இன்னும் அதிகமாகப் போற்றுகிறோம். இவ்வளவு தூரம் வழி காட்டிய இறைவனுக்கு தினமும் நன்றி செலுத்துகிறோம்.

இது போன்ற சோதனை இந்த தொடரைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம். அப்படி வந்து விட்டால் எந்த ஒரு தாயும் இது தன்னால்தான் வந்ததோ என்று எண்ணி வருந்தாதீர்கள். உங்களுடைய உணர்ச்சிகளை உள்ளே பூட்டி வைக்காதீர்கள். குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடலையும் கவனித்துக் கொள்ளவேண்டும், அதனால் மற்றவர்கள் வீட்டில் உதவி செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றோர்கள் எடுக்கும் எந்த முடிவும் குழந்தையின் நலன் கருதியே இருக்கும், அதனால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து நம்மை எதிர்நோக்கி இருப்பது ஒரு தொடர் பந்தயம், அதனால் ஒவ்வொரு கட்டமாகத் தாண்டுவதைப் பற்றி எண்ணுங்கள். இந்த குழந்தையைப் பராமரிக்க உங்களால்தான் முடியும் என்று இறைவன் உங்களிடம் அனுப்பியிருக்கிறான். அதனால் விடியல் தொலைவில் இல்லை என்று எண்ணி திடமாக இருங்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

15 Comments:

Blogger அன்பு said...

உங்களுடைய அனுபவத்தை, மனவலிமையுடன் எதிர்கொண்டதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். நீங்கள் முடிவில் சொல்லியிருக்கின்ற கருத்துக்கள் மிக மிக முக்கியம். இனியெல்லாம் சுகமே... நடக்கும். கண்ணன் மற்ற குழந்தைகளைப் போல் எல்லா நடவடிக்கைக்களும் தொடர வேண்டுதல்களும், வாழ்த்துக்களும்.

மீண்டும் நன்றி.

7:47 PM  
Blogger -/பெயரிலி. said...

ஜெயஸ்ரீ,
உங்கள் குழந்தை குறித்த தொடர்பதிவு தொடுகின்றது. குழந்தை நல்லபடியாக உடல்நலத்துடன் இருக்க விழைகிறேன்.

9:01 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

ஜெயஸ்ரீ
மனதை நெகிழ வைத்த தொடர். குழந்தை நலமுடன் வளர வாழ்வாங்கு வாழ என் வாழ்த்துக்கள். ஆதரவுடன் உங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு என் வணக்கங்கள்.

9:49 AM  
Blogger SnackDragon said...

ஒரு சந்தேகம், நீங்கள்தான் மரத்தடி ஜெயஸ்ரீயா?

12:28 PM  
Blogger இளங்கோ-டிசே said...

ஜெயசிறி, இப்போதுதான் ஆறுதலாக இந்தத் தொடரை வாசிக்கமுடிந்தது. கடும் வேதனைகளில் இருந்து நீங்களும், குழந்தையும், உங்கள் குடும்பமும் எழுந்து வந்துள்ளதைப் பார்க்கும்போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இந்த அனுபவப் பகிர்ந்தலுக்கும் நன்றி.

12:56 PM  
Blogger Nirmala. said...

வணக்கம் ஜெயஸ்ரீ. இப்ப தோணறது வருத்தமா, ஆசுவாசமா என்று சொல்லத் தெரியவில்லை. கண்ணனுக்கு என் அன்பு. உங்கள் குடும்பத்திற்கு என் பிராத்தனைகள்.

நிர்மலா.

10:51 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

சில பதிவுகளை படித்ததும் ஏதாவது சொல்ல நினைத்தும் ஒன்றும் சொல்ல இயலாது. அத்தகைய நிலைமைதான் எனக்கு இப்பொழுது! தொடர்ந்து எழுதுங்கள்.

1:15 AM  
Blogger Jay said...

அன்பு, பெயரிலி, பத்மா, தமிழன், Nirmala, RamachandranUsha
வாழ்த்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.

Karthik,
நான் மரத்தடி ஜெயஸ்ரீ அல்ல.

ஜெயஸ்ரீ

9:20 PM  
Blogger ilavanji said...

நல்லதொரு நெகிழ்வான தொடர்!

கண்ணனுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். மனஉறுதியுடன் இருந்தால் வாழ்வில் எதனையும் கடந்துவரலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று.

கண்ணன் எல்லோரையும் போல இயல்பாய் வளர்ந்து புட்பால் ஆடுவதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.. :) நல்ல மருத்துவத்துடன் மன உறுதியும் சேரும்போது எதுவும் தொட்டுவிடும் தூரத்தில்தான்.

உக்கள் சுட்டியை அறியத்தந்த மதிக்கு நன்றி!

11:40 PM  
Blogger தங்ஸ் said...

Ullam nehila vaitha thodar.
Vaazzvil ella nalamum,valamum pera en prarthanaikal & vaazthukkal!

10:00 AM  
Blogger Jay said...

இளவஞ்சி, தங்கம்
என் குழந்தைக்கு நீங்கள் அளிக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி. அவனைப் போல் மற்ற குழந்தைகளும் நலமுடன் வாழவேண்டும். அமெரிக்காவில் ஒரு பேஸ்பால் டீமின் விளையாட்டுக்காரர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவராம். நம்பிக்கை உடையவர்களுக்கு வானமே எல்லை.

ஜெயஸ்ரீ

1:43 PM  
Blogger இப்னு அப்துல் ரஜாக் said...

pls visit and give your feedback
http://www.peacetrain1.blogspot.com/

10:38 PM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

9:02 AM  
Blogger Abundant Money said...

Please visit: suryakumarans.blogspot.com

5:42 AM  
Blogger Vignesh said...


Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India

11:28 PM  

Post a Comment

<< Home