உள்ளோட்டம்

Saturday, July 30, 2005

Ball விளையாடுவோம் வாரீர்

நாட்டுப்புறப் பாடல்கள் – 7

இது ஒரு தங்கிலீஷ் பாடல்! கல்யாண்ங்களில் (நலுங்கு) பாடப்படுவது உண்டு. சற்று வித்தியாசமானது.

Ball விளையாடுவோம் வாரீர்

Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

பச்சை, white, rose, brown, black, red, rose , கலரினில்
கால்கள் அழகாய் நிறைந்த பந்தலில் நாமும்
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

Uncle, father, brother, அந்த friend-உடனே
அந்தரங்கமுடன் அவரையும் அழைத்து
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

Hand-ஆல் Ball-ஐ அதி வேகமாய் எடுப்போம்
யார் ஜெயிப்பார் என்று அப்புறம் பார்ப்போம்
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

நீர் ஜெயித்தால் நான் Thank You என்பேன்
நான் ஜெயித்தால் என்னை அன்புடன் பாரும்
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நாட்டுப்புறப் பாடல்கள் - 6

இது திரைப்படப் பாடலா என்று தெரியாது. என் மாமியார் பாடிக் கேட்டிருக்கிறேன்.

A Bயும் C Dயும் உள்ள தொரேடீ
பெண்ணே நல்ல தொரேடீ

இத்துனூண்டு இட்டலி விலை அரையணாவாண்டீ
ஆறு இட்டலி தின்னாக்கூட வயத்துக்குப் பத்தலடீ

(A Bயும் C Dயும்)

குட்டிக்குரா பவுடர் விலை ஏறிப்போச்சேடி
ஆகையால அரிசிமாவ அள்ளிப் பூசேண்டி

(A Bயும் C Dயும்)

சக்கரைக்கு ரேஷன் கார்டு கொடுத்துவிட்டாண்டீ
ஆகையால காப்பிக்குக்கூட சக்கரை பத்தலடீ

(A Bயும் C Dயும்)

அரிசிக்கு ரேஷன் கார்டு கொடுத்துவிட்டாண்டீ
ஆகையால விருந்தாளி வந்தால் போகச் சொல்லேண்டி

(A Bயும் C Dயும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 26, 2005

குழந்தைப் பாடல்கள் - 7

இந்தப் பாடலும் சற்று வித்தியாசமானதுதான். இந்தப் பாட்டின் உண்மையான பொருள் என்னவாக இருக்கும் என யோசனை. ஏதாவது உள்ளர்த்தத்தோடு, ஒரு தத்துவத்தைத் தெரிவிக்கிறதோ என சந்தேகம் - ஐந்து கொழுக்கட்டைகளுக்கும் ஐம்புலன்களுக்கும் ஏதாவது சம்பந்தமோ? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்!

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
அது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்
குட்டிப் பெருச்சாளி ஆடுமாம்
கொழுக்கட்டை கொண்டான்னு கேட்குமாம்

ஆனை வந்தது ஆனை
எங்கே வந்தது ஆனை
சண்டைக்கு வந்தது ஆனை
சறுக்கி விழுந்தது ஆனை

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

குழந்தைப் பாடல்கள் - 6

அதோ பாரு காரு

அதோ பாரு காரு
காருக்குள்ளே யாரு
எங்க மாமா நேரு
இங்கே வந்தாரு
தில்லிக்குப் போனேன்
இந்திராவைப் பார்த்தேன்
சல்யூட் அடித்தேன்
சாக்கலேட் தந்தார்
சப்பிச் சப்பித் தின்றேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

குழந்தைப் பாடல்கள் - 5

நிலா நிலா ஓடிவா

நிலா நிலா ஓடிவா
நில்லாமலே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா

நடுவீட்டில் வை
நல்லதுதி செய்
தத்தி தத்தி ஓடிவா
தம்பியோடு ஆடவா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 22, 2005

குழந்தைப் பாடல்கள் - 4

அணிலே அணிலே ஓடி வா

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

குழந்தைப் பாடல்கள் - 3

கை வீசம்மா கை வீசு

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கை வீசு
கம்மல் வாங்கலாம் கை வீசு
காதில் போடலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய்ப் போடலாம் கை வீசு
பள்ளிக்குச் செல்லலாம் கை வீசு
பாடம் படிக்கலாம் கை வீசு
கோயிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
தில்லிக்குப் போகலாம் கை வீசு
திரும்பி வரலாம் கை வீசு

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

குழந்தைப் பாடல்கள் - 2

நான் அடுத்துப் பதியும் இந்த நான்கு பாட்டுக்களும் மிகவும் பிரபலமானவை. இந்தப் பாடல்கள் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தவாறு மாறுபாடுகளுடன் வெகு காலமாகப் பாடப் பட்டு வருபவை. இவற்றை புத்தகங்களில் நீங்கள் படித்திருக்கலாம். எங்கள் வீட்டில் பாடப்படும் வரிகளை இங்கு தந்திருக்கிறேன். இதைத் தவிற வேறு விதமான வரிகள் இருந்தால் இங்கு பதிக்கவும்; அல்லது இணைப்பை பின்னூட்டமிடவும்.

பச்சைக்கிளியே வா வா

பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

குழந்தைப் பாடல்கள் - 1

குழந்தைகளுக்காகவென்றே சில பாடல்கள் உண்டு. காலம் காலமாக வரும் இப்பாடல்களில் சந்தமும், இசைவும் அழகாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதற்கோ, தூங்குவதற்கோ இவ்வகைப் பாடல்கள் மிகவும் உதவியாக இருக்கும். அதுபோன்ற சிலவற்றை இங்கு தருகிறேன்.

காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு பம்பாயி
குந்தோ குந்தோ தலகாணி
குதிரை மேலே சவாரி
ஏன்டி அக்கா அழறே
காஞ்சிபுரம் போகலாம்
லட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டு பிட்டு தின்னலாம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 12, 2005

நாட்டுப்புறப் பாடல்கள் - 5

இன்னுமொரு கோலாட்டப் பாடல்...

கோலேன கோலே

கோலேன கோலே பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே

எட்டடி குச்சுக்குள்ளே எட்டடி குச்சுக்குள்ளே
சுவாமி எத்தனை நாள் இருப்பேன்
மச்சு வீடு கட்டித் தாரும் சுவாமி மலையாளம் போய் வாரேன்

சந்தன வனந்தனிலே பெண்கள் ஷண்பக ஒடையிலே
அந்த துகிலெடுத்து கரத்தின் மேல் கரம் வைத்து
விளையாடும் வேளையிலெ

பசுவா பசுவையா பசுவா பசுவையா
உமக்கு பணம் கொடுப்பாரும் இல்லை
இன்னைக்கு வாயென்று நாளைக்கு வாயென்று ஏய்கிறாரே பசுவா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நாட்டுப்புறப் பாடல்கள் - 4

சின்ன குழந்தைகள் அந்த நாளில் புது ஆடை அணிந்து கொண்டு, திருவிழாக் காலங்ளில் கோலாட்டம் ஆடிக்கொண்டு பாடும் பாடல்...

கோலு கோலு கோலு

கோலு கோலு கோலு கோலு கோலு கோலுன
கோலு வீசி ஆட ரம்ம நாடி வருக நீ

கட்டின உரலோடு தவழ்ந்து கண்ணன் வருகவே
மகா காட்சி பெருகவே

காட்சி பெருகி கோகுலந்தனில் தாட்சி நாயகா
பெண்ணே சாட்சி நாயகா

நாயகன் வந்து நடுமரத்திலே நடுவிலே நுழைய
மரம் கிடு கிடுனு அசைய

அசையும் கிருஷ்ணன் விசையை தூக்கி அம்பரம் தனிலே
சுற்றும் பம்பரம் போலே

பம்பரம் போல் சுழற்றி எறிந்த எம்பெருமானே
சுற்றும் தம்புடு கிரி

தம்புடு கிரி வாசுதேவ கருட வாகன
பெண்ணை திருடும் மோகனா

மோகன மணி வாரன மணி முத்தம் தராயோ
பெண்ணே கிட்ட வாராயோ

வாராயோ வாராயோ வதன கோபாலா
பெண்ணே கிஜன கோபாலா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 08, 2005

நாட்டுப்புறப் பாடல்கள் - 3

நெல் குத்தும்போது பாடுகிற பாடல். வெளியூரிலிருந்து வரும் பையனை எதிர்பார்க்கும் அன்னைக்கு பாடுவது போல் அமைந்துள்ளது. அன்று பட்டணம் போன பையனை எதிர் பார்க்கும் அன்னை. இன்று வெளிநாடு சென்ற மகனை எதிர் பார்க்கும் அன்னை…

குத்தடி குத்தடி சைலக்கா

குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாகக்காய்
தொங்குதடி டோலாக்கு
பையன் வரான் பார்த்துக்கோ
பணம் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்கு பையிலே போட்டுக்கோ
வெள்ளை இட்டலி வாங்கலாம்
வேற பட்டணம் போகலாம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நாட்டுப்புறப் பாடல்கள் - 2

என் மாமியார் பாடும் பாட்டுகளில் என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான்! இதன் ராகமும், பாடும் தொனியும் எழுத்தில் தர முடியாவிட்டாலும், வரிகளைத் தருகிறேன்.

கண்ணான கண்ணோ


கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு

கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ

முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?

ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ

யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ

சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே

செட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே
வைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை
கண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே
பார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே

அம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு
அம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ
ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய
தானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது
இது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது

ஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி
குளமாப் பெருகி குதிரை குளிச்சேறி
வாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி
என் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 04, 2005

நாட்டுப்புறப் பாடல்கள்

பழைய நாட்டுப்புறப் பாடல்களில் உள்ள சுகமே தனி. என் மாமியார் இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்தவர். குழந்தைகளுக்காக அவர் பாடும் சில பாடல்களையும் - அந்தப் பாடல்களை பற்றிய எனது எண்ணங்களையும் இங்கு பதிகிறேன். இந்தப் பாடல்கள் பெருவாரியாக வாய்மொழி மூலமாகவே தலைமுறை தலைமுறையாய் வந்திருக்கின்றன. இதில் பல்வேறு விதமான மருவுகள் இருக்கலாம். உங்களுக்கு இதைப் போன்ற பாடல்கள் தெரிந்தால் தயவுசெய்து பதியவோ அல்லது சுட்டி கொடுக்கவோ தயங்காதீர்.

முதலாவதாக 'பாட்டி' பற்றிய பாட்டு. ஒரு வயதான பாட்டி தன் பேரனோடு உரையாடுவது போல இருக்கும் பாட்டு. பேரன் பொருட்களைப் பற்றி பேசும் போதெல்லாம் காது கேளாததால் உரக்க சொல்லுமாறு கேட்பதும், பாசத்துடன் கட்டிக் 'கொள்ளவா?' என்றவுடன் அது காதில் விழுந்து அருகே வரச் சொல்லுவதும் மிகவும் யதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கும்.

பாட்டி

பாட்டி பாட்டி பாட்டி
வெத்தலை பாக்கு வேணுமா?
காது நல்லா கேக்கல
இன்னும் உரக்க சொல்லம்மா

பாட்டி பாட்டி பாட்டி
புகையிலை கிராம்பு வேணுமா?
காது நல்லா கேக்கல
இன்னும் உரக்க சொல்லம்மா

பாட்டி பாட்டி பாட்டி
நகை நட்டு வேணுமா?
காது நல்லா கேக்கல
இன்னும் உரக்க சொல்லம்மா

பாட்டி பாட்டி பாட்டி
உன்னை நான் கட்டிக்கவா?
காது நல்லா கேக்குது
இன்னும் கிட்ட வாப்பா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கொஞ்சம் தூங்க வேண்டும்!

கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கவிதைகளில் ஒன்று - இப்போதும் என் ஏக்கங்களில் ஒன்று.

கொஞ்சம் தூங்க வேண்டும்

அறியாமையே நீ கொஞ்சம் தூங்கிவிடு
அநியாயமே நீ கொஞ்சம் தூங்கிவிடு
அராஜகமே நீ கொஞ்சம் தூங்கிவிடு
அவலமே நீ கொஞ்சம் தூங்கிவிடு

இருளே நீ கொஞ்சம் தூங்கிவிடு
இரக்கமின்மையே நீ கொஞ்சம் தூங்கிவிடு
இயலாமையே நீ கொஞ்சம் தூங்கிவிடு
இன்னலே நீ கொஞ்சம் தூங்கிவிடு!

தூங்கவேண்டும் நீங்கள் தூளியிலே
வாழ வேண்டும் நாங்கள் பூமியிலே!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.